1)மணத்தக்காளிக் கீரைத் தொக்கு
தேவையானவை:
மணத் தக்காளிக் கீரை – ஒரு கட்டு, சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 10 பல், புளி – சிறிய எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் – 5, வெல்லம் – சிறிய துண்டு, உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயம் – தலா கால் டீஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கீரை, புளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். இது சூடான சாதம், சப்பாத்தி, தோசைக்கு நல்ல சைடு டிஷ். வயிற்றுப்புண்ணுக்கும் நிவாரணம் தரும்.
2)உடனடி வற்றல் குழம்பு
தேவையானவை:
சின்ன வெங்காயம் – 20, புளி – எலுமிச்சை அளவு, பூண்டு – 15 பல், சாம்பார்ப் பொடி – 2 டேபிள்ஸ்பூன், வெந்தயப்பொடி – அரை டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, வெல்லம் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, வடகம் – சிறிதளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.
வறுத்துப் பொடிக்க:
கடலைப் பருப்பு, உளுந்து, துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன் (அனைத்தையும் வெறும் சட்டியில் வறுத்துப் பொடிக்கவும்).
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து வடகம் தாளித்து, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வெங்காயம், பூண்டு சேர்த்துச் சுருள வதக்கி, அத்துடன் சாம்பார்ப் பொடி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு வறுத்த பொடி, வெந்தயப்பொடி, வெல்லம் சேர்த்து நன்றாகக் கொதித்து சுருண்டு வந்ததும் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும். சூடான சாதத்தில் இந்தக் குழம்பு சேர்த்துச் சாப்பிட, சுவை அள்ளும்.
3)பிரசவ மருந்துத் தொக்கு
தேவையானவை:
மிளகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை, தனியா, ஓமம் (இவற்றை வெறுமனே வறுத்து அரைத்து வைக்கவும்) – தலா ஒரு டீஸ்பூன், சிறு எலுமிச்சை அளவு புளியை நெருப்பில் சுட்டு (அ) தணலில் வாட்டி வெந்நீரில் கரைத்து வைக்கவும், பூண்டு – 15 பல், கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம், பெருங்காயம், பூண்டு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த பொருட்களைச் சேர்த்து நன்றாக வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து, கொதித்து எண்ணெய் பிரிந்ததும் எடுத்து ஸ்டாக் செய்துகொள்ளலாம். இந்தத் தொக்கு ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். தேவைப்படும்போது சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இது பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும், நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
4)சின்ன வெங்காயத் தொக்கு:
தேவையானவை:
சின்ன வெங்காயம் உரித்தது – 20, காய்ந்த மிளகாய் – 10, தக்காளி பழுத்தது – 3, கடலைப்பருப்பு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு சிட்டிகை, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – தலா ஒரு கைப்பிடி, புளி – ஒரு கொட்டைப்பாக்கு அளவு, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடலைப் பருப்பு, உளுந்து, சீரகம், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, புளி சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சிறிது கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கவும். இது இட்லி, தோசை என அனைத்துச் சிற்றுண்டிகளுக்கும் ஏற்ற சைடு டிஷ்.
5)திப்பிலித் தொக்கு:
தேவையானவை: கண்டந்திப்பிலி – 5,6 குச்சி, அரிசித் திப்பிலி – 5, 6 குச்சி, சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 2, மிளகு சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், சாம்பார்ப் பொடி – 2 டேபிள்ஸ்பூன், புளிக்கரைசல் – அரை கப், வெல்லம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.
செய்முறை:
இருவகை திப்பிலிகளை வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, தக்காளி பிழிந்துவிட்டு, உப்பு, சாம்பார்ப் பொடி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும், திப்பிலிப் பொடி, மிளகு சீரகத்தூள் சேர்த்து, மறு கொதி வந்ததும் வெல்லம் சேர்த்து நல்லெண்ணெய் பிரிந்ததும் இறக்கி வைக்கவும். அடிக்கடி சளி பிடிப்பவர்கள் வாரம் இருமுறை இதை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்புத் திறன் கூடும்.
6)மருந்துத் தொக்கு:
தேவையானவை:
சுக்குப்பொடி, மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மல்லித்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.
அரைக்க:
ஃப்ரெஷ் ஆன வெற்றிலை – 2, கற்பூரவல்லி இலை- 2, எலுமிச்சை இலை -2, துளசி – ஒரு கைப்பிடி, சித்தரத்தை இலை (அ) பொடி – ஒரு டீஸ்பூன்(அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்).
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கி, சுக்குப்பொடி, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து, இறுதியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கவும். இதை சூடான சாதத்தில் பிசைந்தும், இட்லிக்குத் தொட்டும் சாப்பிட சுவை அள்ளும். ஒரு வாரம் முதல் 10 நாள் வரை கெடாது. காய்ச்சலுக்கு நல்ல மருந்து.
7)புளி இஞ்சித் தொக்கு:
தேவையானவை:
புளி – பெரிய எலுமிச்சம் பழம் அளவு, இஞ்சி துருவியது – 50 கிராம், வெல்லம் – 100 கிராம், பச்சை மிளகாய் கீறியது – 5, 6, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து இஞ்சித் துருவலை வதக்கி, மஞ்சள்தூள் சேர்த்து, பிறகு பச்சை மிளகாய் சேர்த்துப் பிரட்டி, புளிக்கரைசல் சேர்த்து, நன்றாகக் கொதித்து நல்ல வாசனை வந்ததும் வெல்லம் சேர்த்து, இறுகி கெட்டிப் பதம் வரும்போது இறக்கவும்.
இது கேரள மக்களின் பாரம்பர்யத் தொக்கு. அனைத்து உணவுகளுக்கும் சூப்பர் தொடுகை.
8)கற்பூரவல்லித் தொக்கு:
தேவையானவை:
கற்பூரவல்லி இலை – 20 (மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்), புளிக்கரைசல் – கால் கப், மிளகுத்தூள், சீரகத்தூள், ஓமப்பொடி – தலா ஒரு டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் நல்லெண் ணெய் சேர்த்து சீரகம் தாளித்து, அரைத்த கற்பூரவல்லி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், மிளகுத்தூள், சீரகத்தூள், ஓமப்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். வற்றியதும் இறக்கி வைக்கவும். இதை பிரெட், சப்பாத்தி, தோசையில் தடவி ரோல் செய்து கொடுக்க, பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். சூடான சாதத்தில் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். அடிக்கடி சளி், தலைபாரம், சைனஸ் தொந்தரவால் பாதிக்கப்படுபவர்கள், வாரம் இருமுறை இதைச் சாப்பிட்டு வர, நல்ல தீர்வு கிடைக்கும்.
9)நெல்லிக்காய்த் தொக்கு:
தேவையானவை:
முழு நெல்லிக்காய் – 10, கீறிய பச்சை மிளகாய் – 10, புளி – கோலிகுண்டு அளவு, நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், வெல்லம் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுந்து – தாளிக்க, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
நெல்லிக்காயை கொட்டை நீக்கி நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து, நெல்லிக்காய்த் துண்டுகள், பச்சை மிளகாய், புளி, இஞ்சி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, இறுதியில் உப்பு, வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி இறக்கவும். 15 நாள் வரை இந்தத் தொக்கு கெடாது. விட்டமின் சி நிறைந்த இந்தத் தொக்கை, முடி உதிர்தல், ரத்தச்சோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் தினமும் சாப்பிடலாம்.
10)தக்காளி இனிப்புப் பச்சடி
தேவையானவை:
பழுத்த தக்காளி – 5, சிவப்பு பேடகி (காஷ்மீரி சில்லி) மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், சர்க்கரை (அ) வெல்லம் – கால் கப், புளிக்கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, வெந்தயப்பொடி – கால் டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு, சீரகம், நல்லெண்ணெய்.
செய்முறை:
தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் தாளித்து, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள் சேர்த்து, வெல்லம், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வெந்தயப்பொடி சேர்த்து, நன்றாகக் கொதித்து, கெட்டிப் பதம் வந்ததும் இறக்கி, ஆறியதும் ஸ்டோர் செய்யலாம். இது அனைத்து டிபன்களுக்கும் ஏற்ற சைடு டிஷ். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். 10 நாட்கள் வரை கெடாது
கருத்துகள்
கருத்துரையிடுக