1) ரைஸ் சூப்
தேவையானவை:
புழுங்கல் அரிசி – கால் கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, ஆரிகானோ (காய்ந்த கற்பூரவல்லி இலை) – ஒரு டீஸ்பூன், சோளமாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து, அதனுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, ஆரிகானோ, உப்பு சேர்த்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு தம்ளர் கொதிக்கும் நீரில் இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து சேர்த்துக் கரைத்து, ஒரு கொதி வந்ததும் சோளமாவு ஒரு டீஸ்பூன் சேர்த்து, நுரைத்து வந்ததும் இறக்கினால் சத்தான சூப் ரெடி.
2)தால் சூப்
தேவையானவை:
துவரம் பருப்பு – கால் கப், பாசிப்பருப்பு – கால் கப், உலர்ந்த துளசி – ஒரு கைப்பிடி, பச்சரிசி – ஒரு டீஸ்பூன், பெருங்காயப்பொடி – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, பச்சரிசியை வெறும் கடாயில் ஒவ்வொன்றாக வறுத்து எடுத்து, உலர்ந்த துளசி, உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில், தயாரித்து வைத்துள்ள பொடியில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துச் சேர்த்துக் கலந்துவிட்டு, 2 கொதி வந்ததும் இறக்கினால் தால் சூப் தயார். காலை நேரத்தில் நிமிடங்களில் செய்யலாம் புரதச் சத்து நிறைந்த இந்த சூப்.
3)கீரை சூப்
தேவையானவை:
முருங்கைக் கீரை – ஒரு கட்டு, பொன்னாங்கண்ணிக் கீரை – அரைக் கட்டு, துளசி, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், ஓமம் – ஒரு டீஸ்பூன், சோளமாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கீரை வகைகளை நிழலில் உலர்த்தி, வெறும் வாணலியில் வறுத்து, அத்துடன் சோளமாவு தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.
ஒரு தம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து அதில் கரைத்துவிட்டு, மறு கொதி வந்ததும், சோளமாவை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கரைத்துச் சேர்த்து, நன்றாகக் கொதித்து சேர்ந்து வரும்போது இறக்கினால் கீரை சூப் ரெடி. விட்டமின் பற்றாக்குறையை சரிசெய்யும் சூப் இது.
4)பெப்பர் அண்ட் ஜீரா சூப்
தேவையானவை:
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன், துவரம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, சோளமாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சோளமாவு தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து, உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடித்து வைக்கவும். இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, ஒரு கப் அரிசி களைந்த நீரில் கலந்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும், சோளமாவை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து சேர்த்து, மறுகொதி வந்ததும் இறக்கினால் பெப்பர் அண்ட் ஜீரா சூப் ரெடி. விரும்பினால் கட் செய்த ரஸ்க் துண்டுகள் தூவிப் பரிமாறலாம்.
5)மழைக்கால சூப்
தேவையானவை:
சுக்கு – ஒரு துண்டு, மிளகு, சீரகம், திப்பிலி, ஓமம், தனியா (கொத்தமல்லி விதை) – தலா ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், சோளமாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சோளமாவு தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கப் அரிசி களைந்த நீரில் இந்தப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து, சோளமாவை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து இதில் சேர்த்து, மறுகொதி வந்ததும் இறக்கினால் ரெய்னி சூப் ரெடி. மழைக்கால நோய்களில் இருந்து தற்காப்பு பெற, அடிக்கடி இதை குடும்பத்தோடு அருந்தலாம்.
6)சிறுதானிய சூப்
தேவையானவை:
குதிரைவாலி, பாசிப்பருப்பு, சாமை அரிசி – மொத்தமாக 100 கிராம், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், உலர்ந்த கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கப் அரிசி களைந்த நீரில் இந்தப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துக் கலந்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கினால் மில்லட் சூப் ரெடி.
சிறுதானியங்களை உண்ண விரும்பாதவர்களும் சூப்பாகக் கொடுத்தால் பருகிவிடுவார்கள்.
7)காய்ச்சல் சூப்
தேவையானவை:
பாசிப்பருப்பு – 50 கிராம், துவரம் பருப்பு – 50 கிராம், மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், வசம்பு – சிறிய துண்டு, திப்பிலி – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, எலுமிச்சை சாறு – சிறிதளவு, பெருங்காயப்பொடி – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, சீரகம், வசம்பு, திப்பிலி, கறிவேப்பிலை ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் மிக்ஸியில் பொடித்து, அத்துடன் எலுமிச்சை சாறு, பெருங்காயப்பொடி, மஞ்சள்தூள், உப்பு கலந்து வைக்கவும். அரிசி கழுவிய நீர் ஒரு கப் எடுத்துக் கொதிக்கவைத்து, நன்றாகக் கொதித்ததும் இந்தப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து அதில் சேர்க்கவும் (தேவையெனில் ஒரு டீஸ்பூன் சோளமாவை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து இதில் சேர்த்துக்கொள்ளலாம்). காய்ச்சலின்போது இந்த சூப் தினம் இருவேளை எடுத்துக்கொண்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
8)மூலிகை சூப்
தேவையானவை:
மிளகு – 20 கிராம், சீரகம் – 20 கிராம், கண்டதிப்பிலி, அரிசித் திப்பிலி – தலா 10 கிராம், ஓமம் – 20 கிராம், துளசி உலர்ந்தது – ஒரு கைப்பிடி, உலர்ந்த கற்பூரவல்லி இலை – ஒரு கைப்பிடி, பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கறுப்பு உளுந்து – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும், ஒரு தம்ளர் நீரைக் கொதிக்க வைத்து, இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து அதில் கலந்து நன்றாகக் கொதித்ததும் இறக்கினால் மூலிகை சூப் தயார். இதை அருந்திய 20 நிமிடத்தில் கபகபவெனப் பசிக்கும்.
9)கார்ன் சூப்
தேவையானவை:
வேகவைத்து வெயிலில் உலர்த்தி ஒன்றிரண்டாகப் பொடித்த மக்காச் சோளம் – அரை கப், மிளகு, சீரகம் – தலா 2 டீஸ்பூன், ஆரிகானோ (காய்ந்த கற்பூரவல்லி இலை) – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அனைத்துப் பொருட்களை யும் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு தம்ளர் நீரைக் கொதிக்க வைத்து, இந்தப் பொடியில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு அதில் சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் இறக்கி அருந்தலாம்.
10)மசாலா சூப்
தேவையானவை:
பிரிஞ்சி இலை – 2, தனியா (கொத்தமல்லி விதை), சீரகம், மிளகு – தலா ஒரு டீஸ்பூன், லவங்கம் – 6, பட்டை – சிறிய துண்டு, சோம்பு – அரை டீஸ்பூன், பாசிப்பருப்பு, உளுந்து – இரண்டும் சேர்ந்து அரை கப், சோளமாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து இந்தப் பொடியில் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துக் கலந்து நன்றாகக் கொதிக்க வைத்து, இறுதியாக சோளமாவை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து அதில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கினால் மசாலா சூப் ரெடி. இது செரிமானத்தை நன்கு தூண்டும்..
கருத்துகள்
கருத்துரையிடுக